Wednesday, September 2, 2015

இபாதா/வணக்கம் என்பதன் பொருள்

இறைதன்மை (ருபூபிய்யத்) என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே இருப்பதாக உறுதி கொள்ளல் தௌஹீத் அர்-ருபூபிய்யத் ஆகும். 
இறைதன்மை  (ருபூபிய்யத்) கொண்ட ஒன்றின் திருப்தியை நாடி,  அதி உச்சமான பணிவுடன் (The most extreme humility) நாம் செய்யும்  செயல்களனைத்தும் வணக்கம் /இபாதத்  ஆகும். 

அதி உச்சமான பணிவென்பது பெற்றோரின் மீதுள்ள , ஒரு ஆசானின் மீதுள்ள அல்லது நபிமார்கள் நல்லடியார்கள் மீதுள்ள பணிவல்ல. பணிவின் உச்ச நிலை என்பது நம்பிக்கையுடன் தொடர்பு பட்டது.  உள்ளம் சம்பந்தமானது. அதி உச்சமான பணிவானதொரு நிலைக்கு உள்ளம் செல்ல எதன் முன் பணிகிறோமோ அது ருபூபிய்யத்துடைய பண்புகளை கொண்டிருப்பதாக உள்ளம் நம்ப வேண்டியது அவசியமாகிறது. எந்தவொன்றின் மீதும் தங்கி இராமல் சுயமானதாக (Independent) செயல்களை /நிகழ்வுகளை கட்டுபடுத்தக்கூடிய ஆற்றல் ருபூபிய்யதின் ஒரு அம்சமாகும்.

ருபூபிய்யத் என்பதை ஷேய்க் யூசுப் அல்-கர்ளாவி பின்வருமாறு வரைவிலக்கணப்படுதுகிறார்:

"பிரபஞ்சத்தின் படைப்பாளன் இறைவனே. இங்கு காணப்படும் அணைத்து பொருட்களையும் அவனே படைத்தான் இப்பிரபஞ்சத்தினை ஆள்பவன் அவனே. அவனுக்கு இணை கிடையாது. அவன் ஒப்பற்றவன். ஏகன். அவன் விதிகளை மாற்ற யாரும் சக்தி பெறார். அனைத்தையம் படைத்தது பரிபாலித்து வளர்க்கும் இறைவன் அவனே. எல்லா விடயங்களையும் நிர்வகிப்பவன் அவனே.  உயர்வுக்கும் தாழ்வுக்கும் நன்மைக்கும் தீமைக்கும் சுபீட்ச வாழ்வுக்கும் துன்ப வாழ்வுக்கும் காரண கர்த்தா அவனே. அவனல்லாத யாரும் எதுவும் நன்மை தீமைக்கு காரணமாக இல்லை. அவை அல்லது அவர்கள் தமக்கோ பிறருக்கோ நன்மைகளையோ தீமைகளையோ விளைவித்துவிட முடியாது.  இந்த அடிப்படையில் ஒருவன் நம்பிக்கை வைப்பதையே தவ்ஹீத் ருபூபிய்யத் என்று கூறுகிறோம்.."

ருபூபிய்யத்துடைய இருப்பை மறுப்பவன் கடவுள் நம்பிக்கை அற்றவன் ஆகிறான்.
ருபூபிய்யத்துடைய பண்புகள், அல்லாஹ்வை சேர்த்தோ தவிர்த்தோ, பிறருக்கும் இருப்பதாக நம்புகிறவன் முஷ்ரிக்/இணைவைத்தவன் ஆகிறான்.

இன்று உம்மத்தில் பெருமளவான முஸ்லிம்களின் மேல் ஷிர்க் என்ற குற்றச்சாட்டை சுமத்தி அவர்களின் இரத்தத்தை ஓட்டுமளவுக்கு வளர்ந்துள்ள மிகப்பெரும் பித்னாவின் ஆரம்பபுள்ளி வணக்கம்/இபாதா என்ற அடிப்படை அம்சத்தில் உள்ள தெளிவின்மையே.

ரசூலுல்லாஹ் (صلى الله عليه وآله وسلم) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக உங்களில் இருந்து வரும் ஒருவனைப்பற்றி நான் அச்சம் கொள்கிறேன். அவனது முகம் பிரகாசமடைந்து காணப்படுமளவுக்கு அவன் குர்ஆனை அதிகளவு ஓதுவான். அவன் இஸ்லாத்தை பிரதிநிதிதுவப்படுத்துபவனாகவும் இருப்பான். அல்லாஹ் விரும்பும்வரை இது நடைபெறும். பின் அவனுக்கு சிறப்பு தேடித்தந்தவற்றையெல்லம் அவன் புறந்தள்ளிவிட்டு அவனது அயல்வீட்டானை ஷிர்க்கில் ஈடுபடுகிறான் என்று குற்றஞ்சாட்டி வாளினை கொண்டு தாக்கும்போது இவையெல்லாம் அவனிடமிருந்து பறிக்கப்படும்.
இந்த குற்றச்சாட்டு யாருக்கு பொருத்தமானது? தாக்கியவனுக்கா தாக்கப்பட்டவனுக்கா என ரசூலுல்லாஹ்விடம் (صلى الله عليه وآله وسلم) கேட்கப்பட்டது. அதற்கு ரசூலுல்லாஹ் (صلى الله عليه وآله وسلم) "தாக்கியவன்" (மற்றவன் ஷிர்க் செய்கிறான் என குற்றச்சாட்டியவன் ) என  பதிலளித்தார்கள்.

நூல் - இப்னு ஹிப்பான்
(இது ஆதாரபூர்வமான ஹதீத் - இப்னு கதீர் (رحمه الله ), ஹைதமீ (رحمه الله))

எனவே எந்தவொரு செயலும் வணக்கமா இல்லையா என்பதை தீர்மானிக்க நம்பிக்கை அவசியமாகிறது. வெளியில் தெரியும் செயற்பாட்டை மாத்திரம் வைத்துகொண்டு முஷ்ரிக் என பத்வா கொடுக்கும் பெரும்பாவத்தை  விட்டும் நாம் தவிர்ந்துகொள்ள வேண்டும்.  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.