Wednesday, January 19, 2011

கஸீதா புர்தா - "அன்னவர்களின் திரு மேனியை அனைத்துக் கொண்டிருக்கும் மண்ணிற்கு ..."

"அன்னவர்களின் திரு மேனியை அனைத்துக்  கொண்டிருக்கும் மண்ணிற்கு நிகராகும் எத்தகைய நறுமணமும் கிடையா, அதை நுகர்ந்தோருக்கும் முத்தமிட்டோருக்கும் மங்கள முண்டாகட்டும்!"


பூஸரி (رحمه الله)
கஸீதா அல்- புர்தா


இவ்வாறு நமது கண்மணி நாயகம் ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்களை புகழ்ந்து பாடுவதை சில வஹ்ஹாபிகள் எதிர்கின்றனர். இந்த கவி வரிகள் குர்ஆன் ஹதீதுக்கு முரண்பட்டவையா?



ஹதீஸ் 01.


அனஸ்(ரலி) அறிவித்தார்:

நபி(ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை.  நபி(ஸல்) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை  நான் நுகர்ந்ததேயில்லை.
வேறுசில அறிவிப்புகளில் 'உடல் மணம்' என்பதற்கு பதிலாக 'வியர்வை' என்று இடம் பெற்றுள்ளது.


(ஸஹீஹ் புகாரி- 3561)


ஹதீஸ் 02.


அனஸ்(ரலி) அறிவித்தார்:(என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபி(ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்களின் (உடலிலிருந்து வழிகின்ற) வியர்வைத் துளிகளையும் (ஏற்கனவே தம்மிடமுள்ள) நபியவர்களின் தலைமுடியையும் எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிப்பார்கள்.பிறகு அதனை வாசனைப் பொருளில் வைப்பார்கள். (இதையெல்லாம்) நபி(ஸல்) அவர்கள் உறங்கும்போதே (செய்து முடிப்பார்கள்)
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.(என் பாட்டனார்) அனஸ்(ரலி) அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது தம் கஃபன் துணியில் பூசப்படும் நறுமணத்தில் இந்த நறுமணத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு என்னிடம் இறுதி விருப்பம் தெரிவித்தார்கள்.அவ்வாறே அவர்களின் கஃபனில் பூசப்பட்ட நறுமணத்துடன் இதுவும் சேர்க்கப்பட்டது.


(ஸஹீஹ் புகாரி- 6281)


சாதாரணமாக நாம் அருவருக்கும் வியர்வையை ஏன் தனது கபன் துனியில் தடவும்படி அனஸ்(ரலி) அவர்கள் கூறவேண்டும்?


இறந்த பின் அதுவும் தன்னுடைய நற்செயல்கள் மாத்திரமே உதவும் என்று கூறப்படுகின்ற கப்ருடைய வாழ்க்கையில் வேறு ஒருவரின் "வியர்வை" எந்த வகையில் உதவப்போகிறது?
சிந்திக்க வேண்டாமா?


ஹதீஸ் 03.


நபி(ஸல்) அவர்கள்:
"நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான்" என்றனர்.


அறிவிப்பவர் :அவ்ஸ் இப்னு அவ்ஹ்(ரழி)
அபூதாவூது


ஹதீஸ் 04.


அம்ர் இப்னு மைமூன் அல்-அவ்தீ அவர்கள் கூறினார்கள்:
நான் உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன். தம் மகனை நோக்கி அவர்,"அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் கூயிதாகச் சொல்லிவிட்டு, என்னுடைய தோழர்களான ( நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி) ) ஆகிய இருவருடன் நானும் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர்களிடம்அனுமதி கேள்" எனக் கூறினார்.அவ்வாறே கேட்கப்பட்டதும். ஆயிஷா(ரலி) "நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதை விட்டுக் கொடுக்கிறேன்" என்றார்.
இப்னு உமர்(ரலி) திரும்பி வந்தபோது உமர்(ரலி) "என்ன பதில் கிடைத்தது?"எனக் கேட்டார்.இப்னு உமர்(ரலி) "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு அவர் அனுமதியளித்துவிட்டார்" எனக் கூறினார்.
உடனே உமர்(ரலி)"நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு (பூமியில்) மிக முக்கியமானதாக இல்லை" எனக் கூறினார்.


(ஸஹீஹ் புகாரி- 1392)


பூமியில் உள்ள எல்லாமே மறுமையில் ஈடேற்றம் பெறுவதற்கான ஊடகங்களே. அவ்வாறிருக்க பூமியில் உள்ள அனைத்தையும் விட ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்களின் கப்ர் அருகே உள்ள மண் தரைதான் தனக்கு முக்கியமான இடம் என 'அமீருல் மூமினீன்' உமர்(ரலி) அவர்கள் கூறுவதில் இருந்து அம்மண்ணின் மகிமையையும்  மறுமையின் ஈடெற்றத்துக்கு அம்மண்ணின் மூலம் அடையப்பெறக்கூடிய பரக்கத்தினையும் விளங்கிக் கொள்ளலாம்..


ஹதீஸ் 05.

தாவூத் இப்ன் சாலிஹ் அறிவிக்கிறார்:

(மதீனாவின் ஆளுநராகிய) மர்வான் ஒரு மனிதர் தன் முகத்தைத் திரு நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு ரவ்ழா ஷரீபில் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். இதனைக் கண்ட மர்வான் அம் மனிதரின் "நீர் என்ன செய்கின்றீர் என உமக்கு தெரியுமா" எனக் கேட்டார். பின் மர்வான் அம்மனிதருக்கு அருகில் வரும்போது அவர் நபித்தோழரான் அபூ அய்யுப் அல்-அன்சாரி (رضي الله عنهஎன அடையாளம் கண்டு கொண்டார். அபூ அய்யுப் அல்-அன்சாரி (رضي الله عنه)  மர்வானை நோக்கி "ஆம் நான் அறிவேன், நான் அல்லாஹ்வின் திருத் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துள்ளேன்; ஒரு கல்லிடம் அல்ல!"  என கூறினார்.

(முஸ்னத் அஹ்மத் 5;466, முஸ்தத்ரக் அல்ஹாகிம் 4:515)

இமாம் ஹாகிம், தஹபி ஆகியோர் இந்த ஹதீதை சஹீஹ் என கூறுகின்றனர்.

மேற் கூறப்பட்ட அனைத்து ஹதீதுகளின் பொருள்களையும் ஒன்று சேர்த்தே பூஸரி (رحمه الله) அவர்கள்
"அன்னவர்களின் திரு மேனியை அனைத்துக்கொண்டிருக்கும் மண்ணிற்கு நிகராகும் எத்தகைய நறுமணமும் கிடையா, அதை நுகர்ந்தோருக்கும் முத்தமிட்டோருக்கும் மங்கள முண்டாகட்டும்!"
என அழகாக என பாடியுள்ளார்.


குர்ஆன் ஹதீதை பின்பற்றுகிறோம் என வாயளவில் கூறினால் மட்டும் போதாது. அவற்றை படித்து விளங்கி அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்ற்றை கொண்டு கவி பாடுவது சிறப்பானது. இவ்வாறான கவிதைகளை பற்றித்தான் ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்:


إن من الشعر حكمة


"கவிதைகளில் அறிவு ஞானம் இருக்கிறது"
(இமாம் புகாரியின் அல்-அதப் அல்-முஃப்ரத்)


ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்களின் கப்ர் மண் மட்டுமல்ல அவர் உமிழ் நீரை பருகினாலும் அதுவும் அளப்பெரிய அருட்கொடைதான்.


அஸ்மா(ரலி) அறிவித்தார்:
நான் (என் மகன்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை (மக்காவில்) சூலுற்றிருந்தேன். சூல்காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டேன். மதீனா வந்தேன் (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே அவனைப் பெற்றெடுத்தேன்.

பிறகு, நபி(ஸல்) அவர்களிடம் அவனைக் கொண்டு சென்று அவர்களின் மடியில் அவனை வைத்தேன். பிறகு அவர்கள் பேரீச்சம் பழம் ஒன்றைக் கொண்டு வரும்படிக் கூறி அதை மென்று அவனுடைய வாயில் உமிழ்ந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உமிழ் நீர் தான் அவனுடைய வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை அவனுடைய வாயினுள் வைத்து தேய்த்துவிட்டார்கள்.
பிறகு அவனுக்காக துஆ செய்து, இறைவனிடம் அருள்வளம் வேண்டி இறைஞ்சினார்கள். அவன்தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு மதீனாவில்) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான்.


(ஸஹீஹ் புகாரி- 3909)


மேலுள்ள ஹதீதுகளிலிருந்து ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்களின் வியர்வை, தலைமுடி உமிழ் நீர், அவரது கப்ரை சூழ உள்ள இடங்கள்/மண் அனைத்திலும் பரக்கத் உள்ளது என தெளிவாகிறது. அவைகளின் மூலம் எமக்கு ஈடேற்றமும் உள்ளது. (இவ்வாறான பல ஹதீத்கள் ஹதீத் கிரந்தங்களில் காணக் கிடைக்கிறது)


எல்லாம் வல்ல இறைவன் எம் திருத்தூதரை கண்ணியப்படுத்தி அதன் மூலம் ஈடேற்றம் பெறும் கூட்டத்தில் எங்களை ஆக்கி வைப்பானாக..ஆமீன்!


-இப்னு தாஹிர்-

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.