Friday, May 18, 2012

கத்தம் - குர்ஆன் ஓதி அதன் தவாபை இறந்தவர்களுக்கு சேர்ப்பித்தல்

கத்மு (ختم) என்பதற்கு  முடித்தல் என்று அர்த்தமாகும். என்றாலும், இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறை அந்த கத்மு என்ற வார்த்தையை குர்ஆன் ஓதி முடித்தலுக்கு பயன்படுத்தி வருகின்றது. சமூக வழக்கில் குர்ஆனை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ ஓதி அதன் நன்மையை எம்மில் வபாத்தானவர்களுக்கு சேர்த்து வைப்பதற்கு "கத்தம்" என கூறுகிறோம். இதற்கான ஆதாரங்களில் சில இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

ஆயிஷா (رضى الله تعالى عنها) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (صلى الله عليه وسلم)  அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல் திடீரென இறந்துவிட்டார். அவர் (மட்டும் இறுதி நேரத்தில்) பேசியிருந்தால் தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பார் என்று நான் எண்ணுகிறேன். இந்நிலையில் அவருக்காக நான் ஸதகா செய்தால் அவருக்கு நன்மை கிட்டுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (صلى الله عليه وسلم)  அவர்கள் "ஆம்' என்றார்கள்

ஸஹீஹ் முஸ்லிம்
கிதாபுஸ் ஸகாத்/ ஹதீத் எண் 1830


இந்த ஹதீதின் பிரகாரம் அந்த ஸஹாபி குறித்தவொரு செயலை பற்றி ரஸுலுல்லாஹ்விடம் கேட்கவில்லை. பொதுவாக ஸதகா செய்தால் அது இறந்தவரை போய்ச் சேரும் என்றுதான் ரஸுலுல்லாஹ் கூறுகிறார். இதிலிருந்து ஸதகா எனும் வரையறைக்குள் அடங்கும் எந்தச் செயலையும் செய்து அதன் நன்மையை இறந்தவர்களுக்கு சேர்த்து வைக்கலாம் என்பது தெளிவு.இனி ஸதகாவினுள் அடங்கும் செயல்கள் எவை என்பதையும் ரஸுலுல்லாஹ் கூறாமல் போகவில்லை.



நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்: 
எல்லா நற்செயல்களும் ஸதகாவே.

ஸஹீஹ் முஸ்லிம்
கிதாபுஸ் ஸகாத்/ ஹதீத் எண் 1831

இமாம் முஸ்லிம் அவர்கள் இந்த ஹதீதை ஆயிஷா (رضى الله تعالى عنها) அவர்களின் ஹதீதுக்கு அடுத்த ஹதீதாகவே அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. ஆயிஷா  (رضى الله تعالى عنها) அவர்களின் ஹதீதில் வருகின்ற ஸதகா என்பதை தெளிவு படுத்தும் பொருட்டே இந்த ஹதீதை அடுத்ததாக பதிந்தார்களோ என்னவோ! அல்லாஹு அ'லம்!

இந்த இரு ஹதீதுகளின் பிரகாரம் எந்தவொரு நல் அமலையும் செய்து அதன் நன்மையை இறந்தவர்களுக்கு சேர்த்து வைக்கலாம் என்பது தெளிவு.  இந்தக் கருத்தையே ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த இமாம் இப்னு குதாமாவும் தமது முங்னியில் கூறுவதாக
(2/429) ஷெய்க் ஹாகிம் அஷ்-ஷாஙூரி குறிப்பிடுகிறார். குர்ஆன் ஓதுவதும் ஒரு நற்செயல் என்ற ரீதியில் ஸதகாவினுள் அடங்கும். நோன்பு பிடித்தல், ஹஜ் செய்தல், பிறருக்கு உணவளித்தல்,  இவ்வளவும் ஏன், ஒருவர் தனது பாலுறுப்பை தனது மனைவியுடன் ஹலாலான முறையில் பயன்படுத்துவதும் கூட ஸதகாவே!


அபூதர் (رضى الله تعالى عنه) அவர்கள் கூறியதாவது:


நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (صلى الله عليه وسلم) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! வசதிபடைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழு வதைப் போன்றே அவர்களும் தொழுகின் றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல் வங்களைத் ஸதகா செய்கின்றனர். (அவ்வாறு ஸதகா செய்ய எங்களிடம் வசதி இல்லையே!)'' என்று கூறினர். அதற்கு நபி (صلى الله عليه وسلم) அவர்கள், "நீங்களும் ஸதகா செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) ஸதகாவாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) ஸதகாவாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) ஸதகாவாகும்; ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி'யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் ஸதகாவாகும்; தீமையைத் தடுத்தலும் ஸதகாவாகும்; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் ஸதகா உண்டு'' என்று கூறினார்கள்.

மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (صلى الله عليه وسلم) அவர்கள், "(நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக் கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்'' என்று விடையளித்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்
கிதாபுஸ் ஸகாத்/ ஹதீத் எண் 1832





புரைதா (رضى الله تعالى عنه) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم)  அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப் பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப் பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم)  அவர்கள், "(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப் பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது'' என்று சொன்னார்கள். அப்பெண்மணி, "என் தாயார்மீது ஒரு மாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(صلى الله عليه وسلم)  அவர்கள், "அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக் கொள்'' என்றார்கள். அப்பெண்மணி, "என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?'' என்று கேட்டதற்கு, "அவருக்காக நீ ஹஜ் செய்'' என்று அல்லாஹ் வின் தூதர் (صلى الله عليه وسلم)   அவர்கள் கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்



குர்ஆன் ஓதுவது உட்பட அனைத்து நல் அமல்களையும் செய்து இறந்தவருக்கு அதன் நன்மையை சேர்ப்பிக்கலாம் என மேலேயுள்ள ஹதீதுகளிலிருந்து முடிவு செய்யலாம்.
குர்ஆன் ஹதீதை மாத்திரமே பின்பற்றுவோம், மனிதர்களின் அபிப்பிராயங்களுக்கு முக்கியத்துவமளிக்க மாட்டோம் எனக் கூறுபவர்கள் இந்த ஹதீதுகளை விட்டு தமது ஹவாவின் அடிப்படையில் குதர்க்கமாக கேள்விகளை கேட்பதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

அது மாத்திரமல்லாது இறந்தவருக்கு குர்ஆன் ஓதுவது குறித்து குறிப்பாகவும் பல ஹதீதுகள் வந்துள்ளன.

 1.

ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) "உங்களில் இறந்தவர்களுக்கு யாசீனை ஓதுங்கள்" எனக் கூறினார்கள்.
நூல்- அபூ தாவூத்

இந்த ஹதீதை ஹஸன் என்று இமாம் இப்னு ஹஜர் (رحمه الله) இஸாபாவிலும் இமாம் ஸுயூத்தி (رحمه الله) அல்-ஜாமிஉல் ஸஹீரிலும் கூறியபோதும் இமாம் நவவி (رحمه الله) அத்காரில் இதனை ழயீஃப் என கூறுகிறார்.


இது பலவீனமான ஹதீத் என கருதினாலும் ழயீஃபான ஹதீதை மொத்தமாக புறக்கணிப்பது இமாம்களின் நிலைப்பாடல்ல. ழஈப் எனக் கருதப்படும் ஒரு நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு “பத்வா”- 
மார்க்க தீர்ப்பு மட்டும் தான் வழங்க முடியாதேயன்றி அதை ஆதாரமாகக் கொண்டு ஒருவன் செயல்படுவதால் எந்தக் குற்றமும் வந்துவிடாது. ழஈப் பலம் குறைந்த நபீ மொழி கொண்டு “பழாயிலுல் அஃமால்” மேலதிக வணக்க வழிபாடுகளில் செயல்படலாம் என்பது இமாம்களின் ஏகோபித்த, தீர்க்கமான முடிவாகும் (ஷெய்க் ரவூஃப்). 
ஹாபிழ் இப்னு ஹஜர், ஹாபிழ் நவவீ, இமாம் இப்னு அப்திஸ்ஸலாம், ஹாபிழ் ஸகாவீ  போன்ற பல ஹதீது கலை பிக்ஹ் கலை இமாம்கள் எல்லோருமே இதில் கருத்தொருமித்து காணப்படுகின்றனர். எனவே "உங்களில் இறந்தவர்களுக்கு யாசீனை ஓதுங்கள்" எனும் ஹதீதின் பிரகாரம் செயல்படலாம் என்பது தெளிவு.

2.
அப்துல்லாஹ் இப்னு உமர் (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை தடுத்து வைத்துக் கொண்டிருக்காமல் அவரின் கப்ருக்கு விரைந்து கொண்டுசெல்லுங்கள். மேலும் அவரின் தலைமாட்டில் சூரத்துல் பகராவின் ஆரம்பப்பகுதியையும், அவரின் கால்மாட்டில் பகரா சூராவின் கடைசிப் பகுதியையும் ஓதுங்கள் என்று நபி  (صلى الله عليه وسلم) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.

நூல் - ஷுபுல் ஈமான் (பைஹகீ), முஜமுல் கபீர் (தபராணி)

சிலர் இதிலுள்ள யஹ்யா இப்னு அப்தில்லாஹ் என்பவர் பலவீனமானமானவர் என இமாம் ஹைதமி (رحمه الله) கூறியதைக் கொண்டு இந்த ஹதீதை பலவீனமானது என்கின்றனர். எனினும் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (رحمه الله) அவர்கள் இந்த ஹதீதை ஹஸன் என தமது ஃபத்ஹுல் பாரியில் கூறியுள்ளார். மேலும் இந்த ஹதீதை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர் (رضى الله تعالى عنه)  அவர்கள் இந்த ஹதீதின் பிரகாரம் செயலாற்றியுள்ளார்கள் என்பதால் (கீழே) இந்த ஹதீத் ஸஹீஹானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 


3.
அல்-அலாஉ இப்னு லஜ்லாஜ் (رضى الله تعالى عنه) தமது பிள்ளைகளிடம் கூறினார்:  என்னை கப்ரினுள் அடக்கம் செய்யும்போது, என்னைக் குழியில் (لحد)வைக்கும்போது 
"بِاسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ"
எனக்கூறியபின் என்மீது மண்ணைப்போடு. பின்னர் எனது தலைமாட்டில் சூறா பகறாவின் ஆரம்பப் பகுதியையும் கடைசிப்பகுதியையும் ஓதுங்கள். நிச்சயமாக இப்னு உமர் (رضى الله تعالى عنه) அவர்கள் அதனை (அவற்றை ஓதுவதை) விரும்பியதை நான் பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு அல்-அலாஉ இப்னு லஜ்லாஜ் (رضى الله تعالى عنه)
நூல் - சுனன் பைஹகீ.

பைஹீகீயின் அறிவிப்பை இமாம் நவவீ (رحمه الله) அவர்கள் "ஹஸன்" என்று அத்காரிலும் இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் (رحمه الله) "ஹஸன்" என அமாலீ அல்-அத்காரிலும் கூறியுள்ளனர்.

இவ்வாறு இறந்தவருக்கு குர்ஆன் ஓதி அதன் நன்மையை சேர்ப்பிப்பது ரஸுலுல்லாஹ்வின் பழக்கமாகவும் இருந்துள்ளதையும் ரஸுலுல்லாஹ்வை பின்பற்றி லஜ்லாஜ் (رضى الله تعالى عنه) எனும் ஸஹாபியுட்பட பல ஸஹாபிகள் இதனை செய்தமையையும் கீழுள்ள ஹதீதுகளிலிருந்து அறியலாம்.


4.
அப்துர் ரஹ்மான் இப்னு அல்-அலாஉ இப்னு லஜ்லாஜ் அறிவிக்கிறார்கள்:

எனது தந்தை [அல்-அலாஉ இப்னு லஜ்லாஜ் (رضى الله تعالى عنه)] என்னிடம் கூறினார்: "எனது மகனே! நான் மௌத்தானால் எனக்கு ஒரு குழியைத் (لحد) தோண்டு. என்னைக் குழியில் வைக்கும்போது
"بسم الله وعلى ملة رسول الله صلى الله عليه وسلم"
எனக்கூறியபின் என்மீது மண்ணைப்போடு. பின்னர் எனது தலைமாட்டில் சூறா பகறாவின் ஆரம்பப் பகுதியையும் கடைசிப்பகுதியையும் ஓதிக்கொள். நிச்சயமாக ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم)  அவர்கள் அவற்றை ஓத நான் கேட்டிருக்கிறேன்.

நூல் - மு'ஜமுல் கபீர் லித்தபராணி.

இமாம் ஹைதமீ (رحمه الله) அவர்கள் தபராணியின் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகரமானவர்கள் என மஜ்மஉஸ் ஸவாயிதில் தெரிவிக்கிறார்.


5.

அன்ஸாரி ஸஹாபாக்கள் இறந்தவர்களுக்காக பகரா சூரா ஓதுபவர்களாக இருந்தார்கள்.
நூல் - முஸன்னஃப் இப்னி அபீ ஷைபா




இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவதற்காக சில குறித்த நாட்களை (3ம், 7ம், 40ம்..) ஒதுக்குவதிலும் தவறில்லை. ஒரு வணக்க வழிபாட்டை செய்வதற்கு ஒரு குறித்த  நாளை/நேரத்தை வரையறுப்பதையும் ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) எமக்கு காட்டித்தந்திருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் தீனார்
(رحمه الله) அவர்கள் கூறியதாவது:
நபி
(صلى الله عليه وسلم) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குபா பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வருவார்கள் என இப்னு உமர் (رضى الله تعالى عنه) அவர்கள் கூறினார்கள்.இவ்வாறே இப்னு உமர் (رضى الله تعالى عنه) அவர்களும் செய்வார்கள்.

ஸஹீஹ் புகாரி - 1193
 

மேலும் இவ்வாறு ஒரு நாளை வரையறுப்பது எமது இலகுக்காகவேயன்றி அந்த நாளிலேயே அந்த குறித்த அமலை கட்டாயம் நிறைவேற்ற வேண்டுமென எவரும் எண்ணி விடக்கூடாது.  வருடத்தில் ஒரு குறித்த நாளில் குறித்த ஒரு பெரியாரின் கப்ரை ஸியாரத்து செய்யச் செல்வதும் இதனடிப்படையிலேயே.

மேற்கண்ட அனைத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் குர்ஆன் ஓதி அதன் நன்மையை
எம்மில் இறந்த மூமின்களுக்கு சேர்த்து வைக்கலாம் என்பது தெளிவு. இதுவே நான்கு மத்ஹபுகளினதும் ஏகோபித்த முடிவுமாகும்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.