Thursday, December 1, 2011

கப்ர் உள்ள பள்ளியில் தொழலாமா..?




‘யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில்
அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக
ஆக்கிக் கொண்டனர்’ (நூல்: புகாரி)

இறைவா எனது கபுரை வணக்க சிலைகளை போல் ஆக்கி விடாதே! யார் நபிமார்களின் கபுர்களை மஸ்ஜித் ஆக்கினார்களோ அவர்களின் மீது அல்லாஹ்வின் கடுங்கோபம் உண்டாகட்டும் (மிஷ்காத்)

இவ்வாறான ஹதீத்களை வைத்து சிலர் கப்ர் உள்ள பள்ளியில் தொழ முடியாது என கூறுகின்றனர். உண்மையில் "கபுர்களை மஸ்ஜிதாக்குதல்" என்பதால் கருதப்படுவது என்ன??

இவ்வாறான ஹதீத்களை பற்றி விளக்குகையில் ஃபிக்ஹ் கலை மேதை இமாம் இப்‌னு ஹஜர் ஹைதமி (رحمه الله) அவர்கள் கூறுகிறார்கள்:"கபுர்களை மஸ்ஜிதாக்குதல் என்பதன் பொருள் கப்ரின் மேல் தொழுதல் அல்லது கப்ரை கப்ரை நோக்கி (கிப்லாவாக்கி) தொழுதல் ஆகும். மேலும் இந்த தடுப்புச் சட்டம் ஆனது நபிமார்கள் வலிமார்கள் போன்ற சங்கைக்குரியவர்களின் கப்ருகளுக்கே செல்லுபடியாகும..."
(நூல்: ஸவாஜிர்)
மேலும் ஹதீத் வல்லுநர் ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்‌னு ஹஜர் அஸ்கலாநி (رحمه الله)
அவர்கள்  ஹதீதை பற்றி விளக்குகையில்
இமாம் பைதவி (رحمه الله) யை மேற்கோள் காட்டி
கூறுகிறார்கள்:
"யஹூதி நசாராக்கள் நபிமார்களின் கபிருக்கு சுஜுது செய்து வந்தனர். அன்னவர்களுடைய கப்ர்களை கிப்லாவாக்கி தொழுதும் வந்தனர். மேலும் அக்கபுர்களை சிலைகளை போல் வணக்கஸ்தலங்களாகவும் மாற்றி வைத்து இருந்தனர்.இத்தகைய காரியங்கலாலேயே ரசூலுல்லாஹ் صلى الله عليه وسلم இவ்வாறு செய்ய வேண்டாம் என முஸ்லிம்களை தடுத்து இவ்வாறு செய்வோர் மீது லஹ்னத்தும் செய்தார்கள். ஆனால் எவரொருவர்  ஒரு நல்லடியாரின் கப்ருக்கு அருகில் அதனை முன்னோக்காமலும், அந்த நல்லடியாரை மரியாதை செய்யும் முகமாக இல்லாமலும் அந்நல்லடியாருக்கு அண்மையில் தொழுவதால் பரக்கத்தை பெற்றுக்கொள்ளலாம் என எண்ணி தொழுகிறாரோ அவர் இந்த ஹதீதில் கீழ் அடங்க மாட்டார்  "    
(நூல் ஃபத்ஹுல் பாரி)

எனவே "கபுர்களை மஸ்ஜிதாக்குதல்" என்பது கப்ரை கிப்லாவாக்கல், கப்ரை வணங்குதல், கப்ரின் மீது தொழுதல் என்பவற்றையே குறிக்கிறது.  இதனைத்தான் ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்கள் கபுர்களை நோக்கி தொழ வேண்டாம் மேலும் அவற்றின் மீது உட்கார வேண்டாம் (முஸ்லிம்) எனக் கூறி எமக்கு தெளிவு படுத்தியுள்ளார்கள்.

கப்ர் உள்ள பள்ளியில் தொழ முடியாது என்பதற்கு ஆதாரமாக "கபுர்களை மஸ்ஜிதாக்குதல்.." எனும் ஹதீதை கூறுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் செயலாகும். மேலும் எந்தவொரு பள்ளியிலும் தொழும் இடமானது கப்ரை உள்ளடக்கியதாக இருக்காது.  எல்லா பள்ளியிலும் கப்ரும் தொழும் இடமும் குறைந்த பட்சம் ஒரு சுவராலாவது வேறுபடுத்தப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ளவு

கப்ர் அருகே தொழுவது ஆகுமானது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்.

1. மஸ்ஜிதை (மஸ்ஜிதுன் நபவி) துப்புரவு செய்த கறுப்பு நிற பெண்மணி அல்லது வாலிபன்
இறந்து விடுகிறார். ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்கள் அவரைப்
பற்றி விசாரித்தார்கள். அப்போது அவர் இறந்து விட்டதாக சொல்லப்பட்டது. அதை
கேட்ட நபியவர்கள் "எனக்கு ஏன் சொல்லவில்லை" என்றவர்கள் அவருடைய கப்ரை
காட்டுமாறு கூறி அங்கு (கப்ர் அருகே) தொழுகையை நிறைவேற்றினார்கள்.(புகாரி , முஸ்லிம்)


2. ரசூலுல்லாஹ்  (صلى الله عليه وسلم)   கூறினார்கள்:
 மஸ்ஜிதுல் கைஃபில் (مسجد الخيف) நபிமார்களின் கப்ர்கள் 70 உள்ளன.
நூல் - முஸ்னத் அல் பஸ்ஸார், தபராணியின் மு'ஜம் அல்-கபீர்
 இது ஸஹீஹான ஹதீதாகும் என இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (رحمه الله) அவர்கள் முக்தஸர் ஸவாயித் அல்-பஸ்ஸாரிலும் இமாம் ஹைதமி (رحمه الله) அவர்கள் தம்முடைய "மஜ்மவுஸ் ஸவாயிதில்" அல்-பஸ்ஸாரின் அறிவிப்பாளர்கள் யாவரும் நம்பிக்கையானவர்கள் என்றும் கூறுகின்றனர். 

3. அல்லாஹ் அஸ்ஹாபுல் கஹ்ஃப் பற்றி கூறுகையில்:"...இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள் ”நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்"(அல்குர்ஆன் 18:21)

இங்கு அஸ்ஹாபுல் கஹ்ஃபின் கப்ர் அருகே மஸ்ஜித் அமைப்போம் என கூறியவர்கள்
"முஹ்மீன்கள்" என பல இமாம்கள் தமது தப்சீர்களில், நூல்களில்
தெரிவித்துள்ளனர். அவற்றில் சில.

தப்சீர் கபீர் - இமாம் ராஸி (رحمه الله)
தப்சீர் ஜலாலைன் - இமாம் ஸுயுத்தி(رحمه الله)
தப்சீர் நஸபி
தப்சீர் ரூஹுல் பயான்
தப்சீர் பஹ்ருல் முஹீத் - இமாம் அபூ ஹய்யான் (رحمه الله)
தப்சீர் தபரி
தப்சீர்  இப்னு அல்-ஜவ்ஸீ
தப்சீர் பத்ஹுல் கதீர் - இமாம் ஷவ்கானி (رحمه الله)

4. ஹிஜ்ரி 88 இல் வலீத் அவர்களின் ஆட்சி காலத்தில் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (رحمه الله) அவர்கள் ஆளுநராக இருந்த போது மஸ்ஜிதுன் நபவி விஸ்தாரிக்கப்பட்டு ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்களின் புனித கப்ர் பள்ளியுடன் இணைக்கப்பட்டது. அப்போது வாழ்ந்த தலை சிறந்த தாபியீன்கலான ஸைத் பின் முஸய்யப் (رحمه الله) போன்ற எவரும் இதனை ஷிர்க் என்றோ ஹறாம் என்றோ தடுக்கவில்லை. அவ்வாறே ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم)   அவர்களின் ரவ்ளாவின் அருகே 1400 வருடங்களாக முஸ்லிம்கள் தொழுது வருகின்றனர்.

எனவே மேற்கூறிய ஆதாரங்களின் அடிப்படையில் கப்ர் உள்ள பள்ளியில் தொழுவது மார்க்கத்தில் ஆகுமான விடயமாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.